×

கோடை வெயிலில் உடல் உஷ்ணத்தை தணிக்கும் வகையில் மீண்டும் திரும்பி வரும் பழைய சோறு கலாசாரம்


* குடல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு தீர்வாக அமையும்
* மருத்துவர்கள் விளக்கம்

பரபரப்பான வாழ்க்கை முறையில் பலரும் மறந்த ஒரு விஷயமாகவும், நாங்கள் தவறு செய்து விட்டோம் என வெளிப்படையாக கூறும் விஷயமாகவும் உள்ளது என்னவென்று பார்த்தால் உணவு பழக்க வழக்கம்தான். அந்த அளவிற்கு மேலைநாட்டு கலாச்சாரத்தை நமது கலாச்சாரத்தோடு ஒப்பீடு செய்து அந்த நாட்டின் உணவு வகைகளை நமது நாட்டிலும் சாப்பிட்டு வருகின்றனர். ஒவ்வொரு நாட்டிற்கும் ஒவ்வொரு உணவு வகைகள் மிகவும் பிரசித்தி பெற்றதாக இருக்கும். காரணம் அந்த நாட்டில் தட்பவெட்ப நிலை மற்றும் சீதோஷ நிலைகளை கருத்தில் கொண்டு இதுபோன்ற உணவுகளை தயார் செய்வார்கள். சென்னை போன்ற பெரு நகரங்களில் பல நாடுகளுக்கும் சென்று வந்த மக்கள் அந்த நாட்டின் உணவு வகைகளை சென்னையிலும் புகுத்தி விட்டனர். சென்னையில் 110 டிகிரி வரை வெயில் வாட்டி எடுக்கிறது.

இந்த வெயிலிலும் மைதாவால் செய்யப்பட்ட உணவு வகைகள் மற்றும் நமது உடலுக்கு ஆகாத உணவு வகைகளை சமைத்து சாப்பிடுகின்றனர். அதன் விளைவை விதவிதமாக வரும் நோய்கள் மூலம் கண்கூடாக பார்க்கின்றனர். ஆனால் நாம் சாப்பிட்ட உணவு வகைகளால்தான் இது போன்று உடலில் மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பதை அவர்கள் ஒருபோதும் ஒத்துக்கொள்ள மாட்டார்கள். அந்த அளவிற்கு நாவிற்கு அடிமையாகி விட்டனர் சென்னை மக்கள். ஒவ்வொரு நாட்டிற்கும் அந்த நாட்டின் தட்பவெட்ப நிலைக்கு ஏற்ற உணவு வகைகளை முன்னோர்கள் விட்டுச் சென்றனர். ஆனால் நாம் அவர்கள் விட்டுச் சென்ற உணவுகளை தொடர்ந்து பின்பற்றுவது கிடையாது. இதனால் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. இதன் விளைவு சிறு வயதிலேயே பல்வேறு இணை நோய்களுக்கு ஆளாகி மருந்து மாத்திரைகளுடன் உலா வருகின்றனர் நமது மக்கள்.

அந்த வகையில் காலம்காலமாக நமது முன்னோர்கள் நமக்கு காட்டிச் சென்ற உணவு வகைகளை நாம் தவிர்த்து விட்டோம். காலையில் என்ன சாப்பிட்டீர்கள் என்று கேட்டபோது அனைவரும் கஞ்சி, கூழ், பழைய சோறு உள்ளிட்டவற்றை சொல்ல கூச்சப்படுகிறோம். அதற்குப் பதிலாக நூடுல்ஸ், பூரி, மசாலா தோசை, பொங்கல் போன்ற உணவுகளை பெருமையாக சொல்கிறோம். ஆனால் இதில் எவ்வளவு கெடுதல்கள் உள்ளன என்பதை நாம் அறிய மாட்டோம். உதாரணத்திற்கு பொங்கல் சாப்பிடும்போது அரிசி மற்றும் பருப்பு இரண்டையும் சேர்ந்து சாப்பிடுகிறோம். இதில் கலோரி மிகவும் அதிகமாக உள்ளது. இதனால் மந்ததன்மை ஏற்படுகிறது. பூரியை சாப்பிடும்போது அதிகளவு எண்ணெய் உடலில் சேர்கிறது. நூடுல்ஸ் எனப்படும் வகைகளை சாப்பிடும்போது மைதாவை உட்கொள்கிறோம். மைதா என்பது நமது உடலுக்கு ஒவ்வாத உணவு.

இதுபோன்று ஒவ்வொரு உணவிலும் ஒவ்வாமை உள்ளது. ஆனால் அதனை அறியாமல் உட்கொள்கிறோம். அதன் விளைவு உடனடியாக தெரியாது. குறைந்தது 20 வருடங்கள் கழித்துதான் நமக்கு உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை போன்ற இணை நோய்கள் ஏற்படுகின்றன. பரம்பரை நோய்கள் அல்லது புதுவித நோய் வந்துவிட்டது என கடைசிவரை மாத்திரைகளுடன் பயணிக்கிறோம். அந்த நோய் ஏன் வந்தது என்பதை ஒருபோதும் அலசி ஆராய்வது கிடையாது. இதற்கெல்லாம் காரணம் நாம் உட்கொண்ட உணவு முறை என்பதுதான் நிதர்சனமான உண்மை. அந்த வகையில் நம் முன்னோர்கள் விட்டுச் சென்ற உணவுகளில் மிகவும் அரிதான அருமையான உணவுகளில் ஒன்று பழைய சோறு. இதனை கடந்த 20 வருடங்களுக்கு முன்பு பள்ளிக்குச் செல்லும் சிறுவர்கள் சாப்பிட்டுவிட்டு பள்ளிக்குச் செல்வார்கள்.

அப்போது உடன் படிக்கும் மாணவர்கள் காலையில் என்ன சாப்பிட்டீர்கள் எனக் கேட்டால், பழைய சோறு சாப்பிட்டேன் என கூறுவதற்கு தயங்கி, இட்லி தோசை என பெருமையாக கூற நாம் பார்த்திருப்போம். அன்று முதல் படிப்படியாக பழைய சோறு நம்மை விட்டு விலகிச் சென்று விட்டது. குறிப்பாக நகர்ப்புறங்களில் அதனை பெரும்பாலானவர்கள் சாப்பிடுவது கிடையாது. ஆனால் கிராமப்புறங்களில் வயல்வெளிக்குச் செல்பவர்கள் முதற்கொண்டு பெரும்பாலானவர்கள் அதனை இன்றளவும் சாப்பிடுகிறார்கள். இதனால் அவர்கள் உடல்நிலை எவ்வளவு கடினமான வேலைகளை செய்தாலும் சீராக உள்ளதை நாம் அறிவோம். ஆனால் இன்று அதே பழைய சோறு நகர்ப்புறங்களில் ஓட்டல்களில் விற்கப்படுகிறது என்று சொன்னால் நம்மால் நம்ப முடிகிறதா? அந்த அளவிற்கு பழைய சோறின் மகத்துவம் தற்போது அதிகரித்து விட்டது.

நோய்கள் அதிகரிக்க அதிகரிக்க நம் முன்னோர்கள் விட்டுச் சென்ற உணவு முறைகள் மீண்டும் நம்மை நோக்கி வர தொடங்கியுள்ளன. தற்போது நகர்ப்புறங்களில் உள்ளவர்கள் மிகப் பெருமையாக என்றாவது ஒருநாள் பழைய சோறை சாப்பிடும் போது, அதை போட்டோ எடுத்து ஸ்டேட்டஸ் போடும் அளவிற்கு பழைய சோறின் மகத்துவம் தெரிய ஆரம்பித்துள்ளது. இந்த பழைய சோறை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பெரம்பூரைச் சேர்ந்த குடல் மற்றும் ஈரல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் வெங்கடேசன் கூறுகையில், ‘‘80 சதவீத குடல் நோய்களுக்கு பழைய சோறு அருமருந்தாக உள்ளது. அழற்சி என்ற நோயால் வாய் முதல் ஆசனவாய் வரை பாதிப்புக்கு உள்ளாகிறது. குடலில் ஓட்டை விழுவது, ரத்தம் வழிவது, புண் ஏற்படுவது மற்றும் பெருங்குடல் அழற்சி போன்ற பல்வேறு நோய்களுக்கு பழைய சோறு நல்ல மருந்தாக அமைகிறது.

நமது குடலில் செல்களின் எண்ணிக்கையை விட பாக்டீரியாக்களின் எண்ணிக்கை அதிகளவு உள்ளது. அந்த அளவிற்கு மனித உடலில் பாக்டீரியாக்கள் ஒட்டி உறவாடிக் கொண்டு உள்ளன. இந்த பழைய சோறை சாப்பிடும்போது, இது பல்வேறு முறைகளில் நமக்கு நன்மை பயக்கிறது. இரவு நேரங்களில் வடித்த சாப்பாட்டை நாம் தண்ணீர் ஊற்றி ஊற வைக்கும்போது அதில் நல்ல பாக்டீரியாக்கள் உண்டாகி இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மூலக்கூறுகள் அதில் உண்டாகிறது. விட்டமின் சத்துக்கள் அதிகரிக்கின்றன. நெல்லிக்காய், மிளகு, தக்காளி உள்ளிட்ட உணவு வகைகளில் உள்ள இந்த சத்துக்கள் அனைத்தும் சாப்பாட்டை ஊற வைப்பதன் மூலம் இந்த பழைய சோறிலும் உள்ளது.
இதயத்தை பாதுகாக்க கூடிய மூலப்பொருட்கள், மூளையை பாதுகாக்கக்கூடிய மூலக்கூறுகள், கேன்சரை தவிர்க்கக்கூடிய மூலக்கூறுகள், கெட்டுப்போன பாக்டீரியாக்களை அழிக்கக்கூடிய மூலக்கூறுகள் என ஏராளமான மூலக்கூறுகள் இந்த பழைய சாப்பாட்டில் உள்ளது. இன்றைய காலகட்டத்தில் குடல் சம்பந்தமான பிரச்னைகளுடன் வரும் நபர்களுக்கு பழைய சோறை மருந்தாக பல மருத்துவமனைகளில் வழங்குகின்றனர்.

குடலில் ஓட்டை விழுந்த நபர்களுக்கு கூட அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை வந்தால் அவர்களுக்கு ஆங்கில மருந்துடன் பழைய சோறை சேர்த்து தருகிறார்கள். பழைய சோறில் தண்ணீர் ஊற்றி நாம் ஊறவைக்கும் போது அதில் நல்ல பாக்டீரியாக்கள் அதிகளவில் உற்பத்தி ஆகின்றன. இது நமது உடலுக்கு ஆரோக்கியமான நல்ல உணவாக விளங்குகிறது. இதை சாப்பிடும்போது குடல் சார்ந்த அழற்சி நோய் உள்ளிட்ட பல நோய்கள் குணமாகின்றன. நமது உடலில் ஐந்து பில்லியன் பாக்டீரியாக்கள் இருக்க வேண்டும். அது குறையும்போது குடல் அழற்சி நோய் ஏற்பட்டு சாப்பிடும் சாப்பாடு சரிவர செரிமானம் ஆகாது. சிலருக்கு ரத்தம் கலந்து கழிவுகள் வெளியேறும். இதற்கு இயற்கை படைத்த உணவு பழைய சோறு. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியையும் இது அதிகரிக்கிறது. பொதுவாக மண்பாண்ட சட்டிகளில் இந்த பழைய சோறை வைத்து சாப்பிடும்போது அதில் உள்ள தாது பொருட்களும் சேர்ந்து நல்ல ஒரு சக்தியை தருகிறது,’’ என்றார்.

மகத்துவம் அறிவோம்
தற்போது நகர்புறங்களிலும் மக்கள் ஓரளவிற்கு பழைய சோறின் மகத்துவத்தை உணர தொடங்கிவிட்டனர். வருங்கால தலைமுறையினருக்கும் அதன் மகத்துவத்தை கூறி வாரத்தில் இரண்டு நாட்களாவது நம் முன்னோர்கள் விட்டுச் சென்ற இந்த உணவு முறையை பின்பற்றினால் இளைய தலைமுறையினர் நோயில்லாமல் வாழ அது வழி வகுக்கும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. மேலும் தற்போது சுட்டெரிக்கும் கோடைகாலத்தில் பழைய சோறு அருமருந்தாக விளங்குகிறது. பழைய சோற்றுடன் சிறிது வெந்தயம் மற்றும் சின்ன வெங்காயத்தை சேர்த்து சாப்பிடும்போது அது உடல் குளிர்ச்சியை ஏற்படுத்தி பல்வேறு உடல் உஷ்ண நோய்களுக்கு தீர்வாக விளங்குகிறது. எனவே பழைய சோற்றின் மகத்துவம் அறிந்து மீண்டும் அதை நகர்ப்புறத்தில் உள்ளவர்கள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதே மருத்துவர்களின் வேண்டுகோளாக உள்ளது.

மகத்துவம் அறிவோம்
தற்போது நகர்புறங்களிலும் மக்கள் ஓரளவிற்கு பழைய சோறின் மகத்துவத்தை உணர தொடங்கிவிட்டனர். வருங்கால தலைமுறையினருக்கும் அதன் மகத்துவத்தை கூறி வாரத்தில் இரண்டு நாட்களாவது நம் முன்னோர்கள் விட்டுச் சென்ற இந்த உணவு முறையை பின்பற்றினால் இளைய தலைமுறையினர் நோயில்லாமல் வாழ அது வழி வகுக்கும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. மேலும் தற்போது சுட்டெரிக்கும் கோடைகாலத்தில் பழைய சோறு அருமருந்தாக விளங்குகிறது. பழைய சோற்றுடன் சிறிது வெந்தயம் மற்றும் சின்ன வெங்காயத்தை சேர்த்து சாப்பிடும்போது அது உடல் குளிர்ச்சியை ஏற்படுத்தி பல்வேறு உடல் உஷ்ண நோய்களுக்கு தீர்வாக விளங்குகிறது. எனவே பழைய சோற்றின் மகத்துவம் அறிந்து மீண்டும் அதை நகர்ப்புறத்தில் உள்ளவர்கள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதே மருத்துவர்களின் வேண்டுகோளாக உள்ளது.

பாக்டீரியாக்களை அழிக்கும்
நமது உடலில் ஐந்து பில்லியன் பாக்டீரியாக்கள் பெருங்குடல் மற்றும் சிறுகுடலில் உள்ளன. இது பொதுவாக நமக்கு மிகுந்த நோய் எதிர்ப்பு சக்தியை தருகிறது. இது நல்ல பாக்டீரியாக்கள். இது 6 விதமான பாக்டீரியாக்களாக நமது உடலில் உள்ளன. குழந்தை பிறந்து 6 மாதம் முதல் இந்த பாக்டீரியாக்கள் நமது உடலில் வளர ஆரம்பித்துவிடும். இது நமக்கு பாதுகாப்பை தரக்கூடிய பாக்டீரியாக்கள். நாம் சாப்பிடும் உணவில் ஏதாவது கெட்ட பாக்டீரியாக்கள் இருந்தால் நாம் சாப்பிடும்போது நமது வாயில் உள்ள உமிழ்நீரில் உள்ள பாக்டீரியாக்கள் அதனை அழித்து விடும். அதையும் மீறி கெட்ட பாக்டீரியாக்கள் நமது வயிற்றுக்குள் சென்றால் நமது வயிற்றில் உள்ள அமிலத்தன்மை அதனை அழித்துவிடும். அதனையும் மீறி பாக்டீரியாக்கள் நமது உடலுக்குள் செல்லும்போது நமது குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் அதனை அழித்துவிடும். நல்ல பாக்டீரியாவுக்கும் கெட்ட பாக்டீரியாவுக்கும் நடக்கின்ற சண்டையில் நல்ல பாக்டீரியாக்கள் வெற்றி பெற்றுவிடும். இதனை ஆங்கிலத்தில் ஹெல்தி பாக்டீரியாக்கள் என்று கூறுவார்கள். தினமும் நாம் எடுக்கும் உணவுகளில் எதில் நல்ல பாக்டீரியா அதிகம் உள்ளது என்பதை பார்க்க வேண்டும். தினம் நாம் சாப்பிடும் உணவுகளில் தயிரில் நல்ல பாக்டீரியாக்கள் உள்ளது. இதேபோன்று பழைய சோறில் நல்ல பாக்டீரியாக்கள் அதிகம் உள்ளது.

The post கோடை வெயிலில் உடல் உஷ்ணத்தை தணிக்கும் வகையில் மீண்டும் திரும்பி வரும் பழைய சோறு கலாசாரம் appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED இனிமையான வாழ்க்கைத்துணை தரும் திருமணப் பொருத்தம்